சக்திவாய்ந்த நிலநடுக்கம்: வெனிசுலாவில் 188 பேர் பலி



வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் குறைந்தது 188 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தால் தலைநகர் கராகஸ் மற்றும் லா குவைரா மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், மொத்தமாக 250-க்கும் அதிகமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தீவிர காயமடைந்தோர் பலர் சிகிச்சை பெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (25) வெறும் ஒரு நிமிட இடைவெளியில் ஏற்பட்ட இந்த இரண்டு நிலநடுக்கங்களில், இரண்டாவது நிலநடுக்கம் 1900ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெனிசுலாவைத் தாக்கிய மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக பதிவாகியுள்ளது.