வல்வெட்டித்துறை, கொம்மாந்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் ரூ.1 கோடியே 15 லட்சம் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர்களாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெருடாவிலைப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் 19 வயது இளைஞன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 27 ஆம் திகதி பகல் வேளையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டின் புகைக்கூட்டை உடைத்து உள்ளே நுழைந்து இவர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை விரைவுபடுத்தி, CCTV காட்சிகளை ஆய்வு செய்ததன் மூலம் சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
ஒருவர் வல்லைச் சந்தி பகுதியில் கைது செய்யப்பட்டதுடன், மற்றையவர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளில், பணத்தை கண்டதும் சந்தேகநபர்கள் அதனை வீடியோ அழைப்பு மூலம் நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு தகவல் வழங்கியதாகவும், அவரது உத்தரவின் பேரில் பணத்தை எடுத்துச் சென்று காணி ஒன்றில் புதைத்து வைத்ததாகவும் தெரியவந்துள்ளது.
பின்னர் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில், திருடப்பட்ட பணத்தில் ரூ.74 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய நெடுங்கேணியைச் சேர்ந்த மற்றொரு சந்தேகநபர் தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்ற அனுமதியுடன் தடுப்புக்காவலில் வைத்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.