இலங்கை கடற்பகுதிகளில் மோசமான வானிலை: மீனவர்களுக்கு அவதான அறிவுரை.

 


முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரை உள்ள கடற்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட கடல் வானிலை எச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இன்று (02) முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், நாளை (03) முற்பகல் 10.30 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவித்தலின்படி, குறித்த கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும், கடல் நிலை அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் கடல்சார் தொழிலில் உள்ளவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.