போட்ஸ்வானா நாட்டின் கொடியுடன் பயணித்த எம்/டி லெக்ஸி (M/T Lexi) என்ற எண்ணெய் கப்பலின் பணியாளர்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட எச்சரிக்கைகளை புறக்கணித்ததாக அமெரிக்க மத்திய கட்டளை பணியகம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க இராணுவ விமானம் ஒன்று கப்பலின் எஞ்சின் அறையை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாக்குதல் இடம்பெற்ற தருணத்தைக் காட்டும் காணொளியையும் அமெரிக்க மத்திய கட்டளை பணியகம் வெளியிட்டுள்ளது.
எனினும், இந்த சம்பவம் தொடர்பாக ஈரான் இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ கருத்தையும் வெளியிடவில்லை.
ஈரானிய துறைமுகங்களுக்கு நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்து கப்பல்களுக்கும் எதிராக அமெரிக்கா கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி முதல் கடற்படை முற்றுகையை அமுல்படுத்தி வருகிறது.
அமெரிக்க மத்திய கட்டளை பணியகத்தின் அறிக்கையின்படி, சர்வதேச கடற்பரப்பில் கார்க் தீவு நோக்கிப் பயணித்த எம்/டி லெக்ஸி கப்பலுக்கு எதிராக முற்றுகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், 24 மணி நேரத்திற்கும் மேலாக பலமுறை விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு கப்பல் பணியாளர்கள் இணங்கத் தவறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முற்றுகை அமுலுக்கு வந்ததிலிருந்து இதுவரை ஆறு வணிகக் கப்பல்கள் முடக்கப்பட்டுள்ளதுடன், 122 கப்பல்கள் மாற்றுப் பாதைகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை பணியகம் குறிப்பிட்டுள்ளது.
