அடையாள வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது: இன்று வழமைபோல் இயங்கும் பயணிகள் ரயில் சேவைகள்.



 ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்திற்கும், சம்பந்தப்பட்ட பிரதி அமைச்சரின் தனிப்பட்ட செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கலந்துரையாடலில், விவகாரத்துடன் தொடர்புடைய சம்பவம் குறித்து அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் விசாரணை நடத்தி உரிய தீர்மானம் வழங்குவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், இன்று (10) அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் வழமைபோல் இடம்பெறும் என்றும், பொதுமக்கள் எவ்வித இடையூறும் இன்றி பயணிக்க முடியும் என்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும், சரக்கு போக்குவரத்து ரயில் சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் மாத்திரம் திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.