இலங்கை நாடாளுமன்றத்தின் ஜூன் மாதத்திற்கான முதலாவது அமர்வு இன்று (09) காலை 09.30 மணிக்கு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. நாடாளுமன்ற செயலாளர் நாயகம் காரியாலயம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று முதல் வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த அமர்வில் பல முக்கிய சட்டங்கள் மற்றும் கட்டளைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
இன்றைய அமர்வில் முத்திரை தீர்வை விசேட ஏற்பாடுகள் சட்டம், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்திச் சட்டம் உள்ளிட்ட பல கட்டளைகளுக்கு அங்கீகாரம் பெறப்படவுள்ளது. மேலும், உற்பத்தி தீர்வை விசேட ஏற்பாடுகள் சட்டம், பெறுமதி சேர் வரி சட்டம் மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் தொடர்பான தீர்மானங்களும் விவாதிக்கப்படவுள்ளன. பொதுச் சேவை பாதுகாப்புச் சட்டத்தின் கீழான தீர்மானம் விவாதத்தின் பின்னர் அங்கீகாரம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தொலைத்தொடர்பு அறவீடு திருத்த சட்டமூலம் மற்றும் நிதி திருத்த சட்டமூலம் ஆகியவை விவாதிக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து வரும் நாளில் மத்தியஸ்த சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மற்றும் குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டம் தொடர்பான கட்டளை விவாதிக்கப்படும்.
வெள்ளிக்கிழமை, இலங்கை மத்திய வங்கி சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் 20 பில்லியன் ரூபா மேலதிக மதிப்பீடு தொடர்பான விடயங்கள் விவாதிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் காரியாலயம் தெரிவித்துள்ளது.
.jpeg)