சுரேஷ் சலேவின் உறவினர்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அதன் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்ற ஆணைக்குழு அதிகாரிகள், சுரேஷ் சலேயிடம் வாக்குமூலம் பதிவு செய்ததுடன், அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் இருந்த ஏனைய சந்தேகநபர்களிடமிருந்தும் தகவல்களை சேகரித்துள்ளனர்.
மேலும், சுரேஷ் சலேயின் உடல்நிலை மற்றும் தற்போதைய சூழ்நிலையை ஆய்வு செய்வதற்காக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (08) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர், சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் CID அதிகாரிகள் கடந்த வாரம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தனர். எனினும், அன்றைய தினம் வர இயலாது எனத் தெரிவித்த அவர்கள், மாற்று திகதியொன்றை கோரியிருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, குறித்த விசாரணைகளுக்குப் பொறுப்பான அதிகாரி உள்ளிட்ட CID அதிகாரிகள் குழுவொன்றை இந்த வாரத்திற்குள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
.jpeg)