தெல்தெனிய பெண் மரணம் வழக்கு – பொலிஸ் அதிகாரி கைது!!

 


தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் இயன்முறை சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பான விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது மனைவிக்கு தலைமறைவாக இருக்க உதவி ஒத்தாசை வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் மற்றொரு சந்தேகநபர் ஆகியோரை 48 மணித்தியாலங்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நுவரெலியா நீதவான் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகிலுள்ள கார் ஒன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனையில், கழுத்து நெரிக்கப்பட்டதன் காரணமாக மரணம் ஏற்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் காதலர் எனக் கூறப்படும் நபரை பொலிஸார் தேடி வந்த நிலையில், அவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

மேலும், வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் பயணித்த போது பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் மாறு வேடத்தில் இருந்தபடி கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தற்போது கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேகநபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், 48 மணிநேர தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.