கம்பஹா நீதிமன்ற துப்பாக்கிச்சூடு வழக்கு: முக்கிய சந்தேகநபர் கைது.

 பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரின் துப்பாக்கிதாரியாக செயல்பட்டதாக கூறப்படும் “மாட்டியா” எனப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவில் தங்கியிருந்த போது அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் நேற்றிரவு (25) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

கைதுக்குப் பின்னர் சந்தேகநபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

42 வயதான இவர் கொட்டுகொட, யாகொடமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் எனவும், இவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தல் (Red Notice) பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2022 ஜூலை 22 ஆம் திகதி கம்பஹா நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், ‘பஸ்பொட்டா’ எனப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரையும் அவருடன் இருந்த மற்றொருவரையும் கொலை செய்ததுடன், மேலும் பலரை காயப்படுத்திய சம்பவத்திலும் இவர் தொடர்புடையவர் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.