நேற்று (08) அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணிக்கு அவரை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அப்போது அவர் தொடர்ந்து உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தன் மீதான விசாரணைகளில் இருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) பணிப்பாளரை நீக்க வேண்டும் என்றும், தன்னை தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை மாற்ற வேண்டும் என்றும் கோரியே அவர் இந்த போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுரேஷ் சலேக்கு அநாகரிகமாகவும் கொடூரமாகவும் நடத்தப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சில எதிர்க்கட்சிகள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.
நேற்று இரவு முழுவதும் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில, எந்த தடைகள் வந்தாலும் போராட்டத்தை நிறுத்தமாட்டோம் என தெரிவித்துள்ளார்.
சர்வஜன அதிகாரத்தின் உப தலைவர் அனுராதா யஹம்பத், சலே விடுவிக்கப்படும் வரை சத்தியாக்கிரகம் தொடரும் என்றும், இது நாட்டுக்காக சேவையாற்றிய இராணுவத்தினருக்கு அவமானம் என்றும் கூறியுள்ளார்.
மறுபுறம், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி, இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் பதற்றம் தேவையில்லை என்றும், தீர்ப்பு நீதிமன்றத்தின் மூலம் வழங்கப்படும் என்றும் அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் செயல்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
