2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி: மத்திய வங்கியும் பொறுப்புக்கூற வேண்டும் – ஹர்ஷ டி சில்வா.

 திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போன சம்பவம் தொடர்பில், மத்திய வங்கியும் தனது பொறுப்பை ஏற்க வேண்டும் என நிதியமைச்சு தயாரித்துள்ள அறிக்கை சுட்டிக்காட்டுவதாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிதி முறைகேடு தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்க நிதிப் பற்றிய குழு நேற்று (08) பிற்பகல் கூடியிருந்தது. இந்தக் கூட்டத்தில் திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரும் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, சம்பவம் தொடர்பாக திறைசேரியால் தயாரிக்கப்பட்ட அறிக்கை விரிவாக ஆராயப்பட்டதாக அரசாங்க நிதிப் பற்றிய குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

நேற்று இரவு ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.