ஜனாதிபதி சட்டத்தரணிகளான உதித இகலஹேவா, ஃபர்மான் காசிம் மற்றும் சட்டத்தரணி சுகத் கல்தேரா ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, அவிசாவளை மேல் நீதிமன்ற நீதிபதி சஹன் மாபா பண்டாரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதிபதி சஹன் மாபா பண்டார, நுகேகொட மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் வழங்கிய உத்தரவு தொடர்பாக விளக்கமளிக்க அவரை சாட்சியமாக அழைக்க அரச தரப்பு தீர்மானித்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், நீதிபதி ஒருவர் தனது உத்தியோகபூர்வ கடமைகளின் அடிப்படையில் வழங்கிய தீர்ப்பு அல்லது உத்தரவு குறித்து அவரை சாட்சியமாக அழைப்பது நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அழைப்பாணையை இரத்து செய்யுமாறும், மனு மீதான இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரை அதன் அடிப்படையில் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படக்கூடாது என்றும் கோரி மனுதாரர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
அதனை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த அழைப்பாணை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
