சென்னை கோயம்பேடு விபத்து: இலங்கை இளம்பெண்ணைத் தொடர்ந்து காயமடைந்த சிறுமியும் உயிரிழப்பு.



 சென்னை கோயம்பேட்டில் இடம்பெற்ற கார் மோதல் சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த 17 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் முன்னதாக, விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 18 வயதான யான்சி என்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.

தகவல்களின்படி, யான்சி இன்ஸ்டாகிராம் ஊடாக சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் நட்புறவு ஏற்படுத்திக் கொண்டிருந்தார். தனது தோழியைச் சந்திப்பதற்காக சென்னை சென்றிருந்த அவர், இரவு நேரத்தில் கோயம்பேட்டில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்றபோது மற்றொரு குழுவினருடன் முரண்பாட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இருதரப்பினரையும் பாதுகாப்பு ஊழியர்கள் வெளியேற்றிய நிலையில், பின்னர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த யான்சி மற்றும் அவருடன் சென்ற சிறுமி மீது, முரண்பாட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தரப்பினர் பயணித்த கார் வேகமாக மோதியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த யான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த 17 வயது சிறுமி படுகாயங்களுடன் கீழ்பாக்கம் அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக கோயம்பேடு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், பாலகுரு மற்றும் சுமன் சக்திவேல் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் காரில் அரசியல் கட்சியொன்றின் கொடி கட்டப்பட்டிருந்தமைவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய கேளிக்கை விடுதி அதிகாரிகளால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.