ரூபாயின் மீதான அழுத்தம் குறைய பொருளாதார சீர்திருத்தங்கள் அவசியம் – தனநாத் பெர்னாண்டோ.

 


இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டு வரும் அழுத்தத்தைக் குறைப்பதற்கு பொருளாதார சீர்திருத்தங்களை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவது கட்டாயமானது என பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப எரிபொருள் விலைகளை உரிய நேரத்தில் திருத்தம் செய்யத் தவறினால், அமெரிக்க டொலருக்கான தேவை அதிகரித்து ரூபாயின் மீது மேலும் அழுத்தம் ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மே மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் ரூபாய் பெறுமதி வேகமாக வீழ்ச்சியடைந்த பின்னர் மீண்டும் வலுவடைந்தமை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய தரவுகளை சுட்டிக்காட்டிய அவர், இலங்கை மத்திய வங்கி மே மாதத்தில் சுமார் 220 மில்லியன் அமெரிக்க டொலர்களை சந்தைக்கு வெளியிட்டதாக குறிப்பிட்டார்.

அதேவேளை, சந்தையில் புழக்கத்தில் இருந்த ரூபாய் நாணயத்தை மத்திய வங்கி மீளப் பெற்றுக்கொண்ட நடவடிக்கையும், ரூபாயின் பெறுமதி மீள வலுவடைய காரணமாக அமைந்ததாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்வடைந்து வரும் நிலையில், உள்நாட்டு சந்தையிலும் டொலருக்கான கேள்வி அதிகரிக்கின்றது. இதனால் எரிபொருள் விலைகளை சந்தை அடிப்படையில் திருத்துவது முக்கியமான நடவடிக்கையாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தற்போது மூன்றாம் தரப்பினரின் கைக்குச் சென்றுள்ளதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை மீட்டெடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அதன் நிதிச் சுமை இறுதியில் பொதுமக்கள் மீது வரி வடிவில் சுமத்தப்படக்கூடும் என்றும் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.