பாதுக்கை, மாதுலாவ பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சுதர்மாராம விகாரையின் ஒலிப்பதிவுக் கூடத்தை உடைத்து சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான கணினிகள் மற்றும் ஒலிப்பதிவு உபகரணங்களைத் திருடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விகாரையில் பௌத்த பாடல்கள் (கவி பண) பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட ஒலிப்பதிவுக் கூடம் உடைக்கப்பட்டதாக அங்குள்ள தேரர் ஒருவர் பாதுக்கை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பாதுக்கை, வட்டரெக ஜயமுதுகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருடப்பட்ட பொருட்களை அவர் மற்றொருவருக்கு விற்பனை செய்திருந்த நிலையில், பொலிஸார் அவற்றை மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேகநபர் ‘ஐஸ்’ போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையானவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து ‘ஐஸ்’ போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சந்தேகநபர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
.jpeg)