இலங்கையின் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை.

 


இலங்கையின் பல பகுதிகளில் இன்று (30) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பதிவாகும் வாய்ப்பும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனுடன், மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதற்கும் மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.