சீரற்ற காலநிலை காரணமாக 2025ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட அனர்த்தங்களால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணிகள் 2026ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறைவு செய்ய முடியாது என நிதி அமைச்சு வெளியிட்ட 2027ஆம் ஆண்டுக்கான நிதி மூலோபாய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தத்தால் ஏற்பட்ட அழிவுகளை சரிசெய்ய பாராளுமன்றம் 2026ஆம் ஆண்டுக்காக 500 பில்லியன் ரூபாய் மேலதிக நிதி ஒதுக்கீட்டை அங்கீகரித்திருந்த போதிலும், மீள்குடியேற்றத் திட்டங்களின் பரப்பளவு மற்றும் சிக்கலான தன்மை காரணமாக அனைத்துப் பணிகளையும் ஒரே ஆண்டில் நிறைவு செய்ய முடியாது என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், அந்த ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட மேலதிக நிதியில் பயன்படுத்தப்படாத தொகைகளை 2027ஆம் ஆண்டுக்கு மாற்றி பயன்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் பொது நிதி முகாமைத்துவ சட்டத்தின் கீழ் இல்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், மீதமுள்ள பணிகளுக்கான நிதி தேவைகள் ஆண்டு இறுதியில் மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டின் பின்னரே தீர்மானிக்கப்படும் எனவும் அறிக்கை கூறுகிறது. சில பணிகளை 2027ஆம் ஆண்டுக்கான முதன்மை செலவு வரம்புக்குள் நிர்வகிக்க முடிந்தாலும், முழுமையான நிறைவு பெற கூடுதல் நிதி ஒதுக்கீடு அவசியமாக இருக்கலாம் என்றும், அதன் அளவும் காலவரம்பும் இன்னும் உறுதியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், 2027ஆம் ஆண்டில் துணை மதிப்பீடு மூலம் பாராளுமன்ற அங்கீகாரத்தை பெற்று, 2026ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மீளமைப்பு பணிகளை நிறைவு செய்வதற்கான செலவுகளை மட்டும் மேற்கொள்ள முடியும் என நிதி மூலோபாய அறிக்கை மேலும் விளக்குகிறது.