தனஞ்சயாவின் சதமும் பலனளிக்கவில்லை: இலங்கை அணிக்கு பெரும் தோல்வி.



 இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி இனிங்ஸ் மற்றும் 217 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

போட்டியின் நான்காவது நாளான நேற்று (28), இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 101 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், இனிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 308 ஓட்டங்களைப் பதிவு செய்தது.

இலங்கை அணியின் சார்பில் அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா சிறப்பாக விளையாடி 120 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 626 ஓட்டங்களை குவித்து மிகப்பெரிய முன்னிலையைப் பெற்றது. அந்த அணியின் அமிர் ஜங்கூ அபாரமாக 233 ஓட்டங்களையும், ரொஸ்டன் சேர்ஸ் 194 ஓட்டங்களையும் விளாசி இலங்கை பந்துவீச்சை சிதறடித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.