மிஹிந்த தேரர் தலைமையிலான தர்மதூதுக் குழுவினர் இன்றைய போன்ற ஒரு பௌர்ணமி நாளில் இலங்கைக்கு வருகை தந்து, அந்நாளில் அநுராதபுரம் மிஹிந்தலை குன்றில் தேவநம்பியதிஸ்ஸ மன்னனுக்கும் அவரது பரிவாரங்களுக்கும் பௌத்த தர்மத்தை போதித்ததாக வரலாறு குறிப்பிடுகிறது.
அதனைத் தொடர்ந்து இலங்கையில் பௌத்த மதம் உறுதியாக நிலைநாட்டப்பட்டதுடன், நாட்டின் சமய, சமூக மற்றும் கலாசார துறைகளில் குறிப்பிடத்தக்க மறுமலர்ச்சி ஏற்பட்டது.
பின்னர், சங்கமித்தை தேரி உள்ளிட்ட குழுவினர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்ததன் மூலம் பௌத்த பாரம்பரியம் மேலும் வலுவடைந்ததுடன், போதி மரக்கிளை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டமை உள்ளிட்ட பல வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளும் இடம்பெற்றன.
பௌத்த தர்மத்தின் செல்வாக்குடன் இலங்கையின் கலாசாரம், நீர்ப்பாசன நாகரிகம் மற்றும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பு மேலும் வலுப்பெற்றதாக வரலாற்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த ஆண்டுக்கான தேசிய பொசன் பௌர்ணமி விழா மிஹிந்தலை புனித பூமியை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மிஹிந்தலையில் விசேட மத வழிபாடுகள், தர்ம சொற்பொழிவுகள் மற்றும் பல்வேறு சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
