இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, 2026 ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கு 1,360 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது.
ஆனால் 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 1,543.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில், இந்த ஆண்டில் சுற்றுலா வருமானம் 11.9% வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மே மாதத்திற்கான தரவின்படி, 2026 மே மாதத்தில் சுற்றுலா வருமானம் 155.7 மில்லியன் டொலராக இருந்தது. கடந்த ஆண்டின் மே மாதத்தில் இது 164.1 மில்லியன் டொலராக இருந்தது.
இதேவேளை, வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பண அனுப்பல் வருமானம் உயர்வை பதிவு செய்துள்ளது. 2026 ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் 3,909.7 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலத்தில் இது 3,102.2 மில்லியன் டொலராக இருந்தது. இதன் மூலம் வெளிநாட்டு பண அனுப்பல் வருமானம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
