உலகக் கிண்ண கால்பந்து: நியூசிலாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய எகிப்து.



உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் நியூசிலாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி எகிப்து அணி முக்கியமான வெற்றியை பதிவு செய்துள்ளது.

23-வது உலக கிண்ண கால்பந்தாட்ட தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (22) காலை 6.30 மணிக்கு நடைபெற்ற ‘G’ பிரிவு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் எகிப்து அணிகள் மோதின.

ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் நியூசிலாந்து அணிக்காக ஃபின் சுர்மான் முதல் கோலை பதிவு செய்து முன்னிலை பெற்றார். முதல் பாதி முழுவதும் மேலதிக கோல்கள் எதுவும் பதிவாகவில்லை.

இரண்டாம் பாதியில் எகிப்து அணி வலுவான மீள்ச்சியை காட்டியது. 58-வது நிமிடத்தில் முஸ்தபா ஜிகோ கோல் அடித்து போட்டியை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தார்.

பின்னர் 67-வது நிமிடத்தில் உலகப் புகழ்பெற்ற வீரர் முகமது சலா கோல் அடித்து எகிப்துக்கு முன்னிலை வழங்கினார். அதனை தொடர்ந்து 82-வது நிமிடத்தில் டிரெஜ்குவெட் மேலும் ஒரு கோல் அடித்து 3-1 என முன்னிலை உறுதிப்படுத்தினார்.

மீதமுள்ள நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. போட்டியில் சிவப்பு அட்டை எதுவும் காண்பிக்கப்படவில்லை. நியூசிலாந்து அணிக்கு இரண்டு மஞ்சள் அட்டைகளும், எகிப்து அணிக்கு ஒரு மஞ்சள் அட்டையும் வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் எகிப்து அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது. நியூசிலாந்து அணி கடைசி இடத்தில் உள்ளது.