அநுராதபுரம், கல்கிரியாகம, சமனலவெவ மற்றும் கிரானேகம ஆகிய பகுதிகளில் இந்த விபத்துகள் பதிவாகியுள்ளன.
அநுராதபுரம் – ரம்பேவ வீதியின் சாலியபுர கல்வல சந்திக்கு அருகே, வலதுபுறமாக திரும்ப முயன்ற மோட்டார் சைக்கிள் பின்னால் வந்த பேருந்துடன் மோதியதில் இருவர் காயமடைந்தனர். அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த குருந்தங்குளம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கலேவெல – கெகிராவ வீதியில் கெகிராவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த வேனுடன் மோதியதில் மூவர் காயமடைந்தனர். பின்னர் சிகிச்சைக்காக மாற்றப்பட்ட நிலையில், தேவஹுவ பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய இளைஞர் உயிரிழந்தார். இது தொடர்பாக கல்கிரியாகம பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமனலவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பஹின்ன பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்ததைத் தொடர்ந்து அதன் பின்னால் பயணித்தவர் எதிரே வந்த பேருந்துடன் மோதியதில் உயிரிழந்தார். உயிரிழந்தவர் பலங்கொடை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேநேரம், கிரானேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனகட்டாவ பகுதியில், லொறியை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து, எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் செலுத்திய தேவஹுவ பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இந்த நான்கு விபத்துகள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
.jpeg)