பௌத்த பாரம்பரியத்தை மீள நிலைநிறுத்தி நவீன தேசம் உருவாக்குவோம் – ஜனாதிபதி.



 பௌத்த தர்மத்தின் மூலம் இலங்கைக்கு கிடைத்த நாகரிக சமூகத்தின் உயரிய பாரம்பரியத்தை மீண்டும் நிலைநிறுத்தி, ஒழுக்கமும் நற்பெறுமானங்களும் நிறைந்த நவீன தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள தனது வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையை நாகரிக வளர்ச்சியடைந்த தேசமாக மாற்றிய பௌத்த தர்மம், மஹிந்த தேரரின் வருகையுடன் இந்நாட்டில் நிலைநிறுத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்பை ஜனாதிபதி நினைவுகூர்ந்துள்ளார்.

மஹிந்த தேரரின் வருகை ஒரு மத நிகழ்வாக மட்டுமன்றி, நாட்டின் கலாசாரம், சமூகம், கல்வி, அரசியல் மற்றும் ஆன்மீக வாழ்வில் ஆழமான மாற்றத்தை ஏற்படுத்திய முக்கிய திருப்புமுனையாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த தர்மத்தின் செல்வாக்கின் மூலம் விகாரைகள், பிரிவெனாக்கள், கல்வி மையங்கள் உருவாக்கப்பட்டதுடன், அறிவுப் பரவல், ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் சமூக முன்னேற்றத்திற்கும் வலுவான அடித்தளம் அமைந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, நீர்ப்பாசன அமைப்புகள் மற்றும் வீடமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பௌத்த நாகரிகம் இலங்கையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இன்றைய தலைமுறையின் பொறுப்பு, சமூகத்தில் சிதைந்து வரும் நற்பண்புகள் மற்றும் அடிப்படை விழுமியங்களை மீட்டெடுத்து, ஒழுக்கம், சமூகவியல் பொறுப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கொண்ட நவீன நாகரிக தேசத்தை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதே எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல், பாராளுமன்றம், அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நாகரிக பண்புகளை நிலைநிறுத்தும் முயற்சியில் அரசாங்கம் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக, கருணை, இரக்கம் மற்றும் ஞானம் நிறைந்த பொசன் பௌர்ணமி தினத்தை அனைவரும் அர்த்தமுள்ள வகையில் கொண்டாட வாழ்த்தியுள்ள ஜனாதிபதி, நாகரிகமான இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரும் உறுதியுடன் கைகோர்க்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.