தென்மேற்குப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – பல மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை.



 இன்று (02) மாலை முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை முன்னறிவிப்பின்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

மேலும், இப்பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.