இறக்குமதி கொடுப்பனவுகளுக்கு புதிய கண்காணிப்பு முறை; இன்று முதல் அமுலுக்கு வந்த அரசின் புதிய ஒழுங்குமுறை.

 



இலங்கையில் மேற்கொள்ளப்படும் இறக்குமதி பரிவர்த்தனைகளின் வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மேலும் திறம்படக் கண்காணிக்கும் நோக்கில் அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக உள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின் அடிப்படையில், இறக்குமதி பரிவர்த்தனைகளுக்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவிற்கும் வங்கிகள் மூலம் தனித்துவமான சிறப்பு பரிவர்த்தனை எண் வழங்கப்பட வேண்டும்.

மேலும், அந்தப் பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களும் இலங்கைச் சுங்கத் திணைக்களத்திடம் கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இதன்படி, இறக்குமதியாளரின் வரி அடையாள எண் (TIN), முகவரி, பயனாளி விவரங்கள், வங்கி மற்றும் கிளை குறியீடுகள், கொடுப்பனவு தொகை, பயன்படுத்தப்படும் நாணய வகை, கொடுப்பனவு மற்றும் விநியோக நிபந்தனைகள், கொடுப்பனவு திகதி, தற்காலிக விலைப்பட்டியல் இலக்கம் மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை வங்கிகள் சுங்கத்துறைக்கு வழங்க வேண்டும்.

அதேவேளை, இறக்குமதிக்கான முற்கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு முன்பு, அனைத்து இறக்குமதியாளர்களும் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தில் தகுதிவாய்ந்த இறக்குமதியாளர்களாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதிவு இல்லாதவர்களுக்கு வர்த்தக வங்கிகள் மூலம் முற்கொடுப்பனவுகளைச் செய்ய அனுமதி வழங்கப்படாது என புதிய ஒழுங்குமுறைகள் தெரிவிக்கின்றன.

இன்று (19) முதல் அமுலுக்கு வரும் இந்த புதிய நடைமுறைகள் மூலம் இறக்குமதி துறையில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதோடு, நாட்டின் வெளிநாட்டு நாணய வெளியேற்றத்தை முறையாகக் கண்காணிப்பதையும் அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது.