அர்ச்சுனா - கஜேந்திரகுமார் இடையே காரசார வாக்குவாதம்; வலிகாமம் வடக்கு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பரபரப்பு!



 வலிகாமம் வடக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர்களான இராமநாதன் அர்ச்சுனா மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதம் காரணமாக கூட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் அதன் தலைவர் ஶ்ரீபவாநந்தராஜா தலைமையில் நேற்று (18) நடைபெற்றது.

கூட்டத்தின் போது, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் அதன் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.

இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், குறித்த வைத்தியசாலை மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழேயே தொடர வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், வைத்தியசாலையின் அபிவிருத்திக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை அரசாங்கம் போதுமான அளவில் வழங்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மறுபுறம், வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் சேவைகள் விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு, அது மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என இராமநாதன் அர்ச்சுனா வலியுறுத்தினார்.

இதையடுத்து இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், கூட்டத்தில் சில நேரம் அமைதியின்மை நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னர், குறித்த யோசனையை இன்றைய தினம் நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்திக் குழுத் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன், அந்த யோசனை தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அவற்றை முன்வைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.