தங்கச் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கட்டான, கெட்டுவெல்லேகம பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 6 கிராம் 210 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீரிகம, கிதுல்வல இஹல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவரான இவர், பல பகுதிகளில் தங்கச் சங்கிலி பறிப்பு மற்றும் சொத்துக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
பூகொட, கிரிந்திவெல, கொஸ்கம, வீரம்புகெதர, நாரம்மல, பொல்கஹவெல, பாதுக்கை, கட்டுநாயக்க மற்றும் மினுவாங்கொடை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த பல கொள்ளைச் சம்பவங்களில் இவருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், ஒரு வாள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட தங்கச் சங்கிலிகளுக்குச் சொந்தமான 9 தங்கக் கட்டிகள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, ஜூன் 16ஆம் திகதி வரை தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
.jpeg)