சீன பாதுகாப்பு ஆலோசகர் Fu Xiao – அருண ஜயசேகர சந்திப்பு.

 


இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் Fu Xiao, பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) Aruna Jayasekaraவை நேற்று (15) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.

இலங்கை ஆயுதப்படைகளின் பயிற்சி மற்றும் தொழில்முறை திறன் மேம்பாட்டிற்கு சீனா நீண்டகாலமாக வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு பாதுகாப்பு பிரதியமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார்.

மேலும், நில அடிப்படையிலான பாதுகாப்பிலிருந்து கடல்சார் கள விழிப்புணர்வு (Maritime Domain Awareness) வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை மேற்கொண்டு வரும் மூலோபாய மாற்றத்தையும் அவர் விளக்கினார். அதேபோல், நாட்டின் நடுநிலையான அணிசேரா வெளிநாட்டு கொள்கைக்கான அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல், மனிதக் கடத்தலைத் தடுக்கும் கடல்சார் பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, பயிற்சி திட்டங்கள், ஒப்புருவாக்க (Simulation) பயிற்சிகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் ஆகிய துறைகளில் எதிர்கால ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இரு தரப்பும் இணக்கம் தெரிவித்தன.

இந்த சந்திப்பில் சீன தூதரகத்தின் பிரதிப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் கடற்படை ஆலோசகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.