ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனை மேல் நீதிமன்றத்தால் உறுதி.

 


இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உறுதி செய்துள்ளது.

சிறைத்தண்டனையிலிருந்து தன்னை விடுவித்து விடுதலை செய்யுமாறு கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

2016ஆம் ஆண்டு கிருலப்பனை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இன நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

விசாரணைகளின் பின்னர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதை அடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் 9 மாத சிறைத்தண்டனை விதித்திருந்த நிலையில், அந்தத் தீர்ப்பை மேல் நீதிமன்றம் தற்போது உறுதி செய்துள்ளது.