சொத்து விவர சமர்ப்பிப்பு அவகாசம் நீட்டிப்பு?

 


சொத்து மற்றும் கடன் விபரக் கூற்றுகளை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று (30) முடிவடைவதாக இலஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை தங்களது சொத்து மற்றும் கடன் விபரங்களை சமர்ப்பிக்காத அதிகாரிகள் இன்றைய தினத்திற்குள் அவற்றை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக, அனைத்து தொடர்புடைய அதிகாரிகளும் தங்களது சொத்து மற்றும் கடன் விபரக் கூற்றுகளை இணையவழி (Online) மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று முடிவுக்குப் பிறகு தகவல்களை சமர்ப்பிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என இலஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அதிகளவிலானோர் ஒரே நேரத்தில் இணையதளத்தில் நுழைந்து தகவல்களை சமர்ப்பிக்க முயன்றதால், இணையதளத்தில் சில தொழில்நுட்ப தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, இன்று தகவல்களை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கு ஒரு வார சலுகைக்காலம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஜூலை 7ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை சொத்து மற்றும் கடன் விபரங்களை சமர்ப்பிக்கலாம் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.