பல மாகாணங்களுக்கு மழை எச்சரிக்கை: இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்பு..

 


நாட்டின் பல பகுதிகளில் இன்று (11) மழையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், தென் மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களாலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதனால், மின்னல் மற்றும் பலத்த காற்று காரணமாக ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.