இரண்டு வாரங்களில் முழுமையான வெற்றி” – ஈரான் குறித்து ட்ரம்ப் மீண்டும் நம்பிக்கை வெளிப்பாடு.

 


அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் தொடரும் நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றியைப் பிரகடனப்படுத்தும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஈரான் தரப்பு மிகச் சிறந்த உடன்படிக்கைக்கு தயாராக இருப்பதுடன், அணு ஆயுதங்கள் தேவையில்லை என அறிவிக்கவும் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், “இந்த மோதலில் நாம் வெற்றிப் பாதையில் உள்ளோம். இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையான வெற்றியை அறிவிக்கும் நிலை உருவாகும். அது மிக விரைவில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகளும் வேகமாகக் குறையும்” எனக் கூறினார்.

எனினும், இரண்டு வாரங்களுக்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என ட்ரம்ப் தெரிவித்திருப்பது இதுவே முதல் முறை அல்ல என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட ஈரான் தொடர்பான போர்நிறுத்த ஏற்பாடு, நிரந்தர உடன்படிக்கை எட்டப்படும் வரை ஆரம்ப கட்டமாக இரண்டு வாரங்களுக்கு அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், “ஈரான் உண்மையில் உடன்படிக்கைக்கு தயாராக இருந்தால் ஏன் இதுவரை அதில் இணங்கவில்லை?” என்ற கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “அவர்கள் வலிமையானவர்கள், பெருமைமிக்கவர்கள். இதுவரை செய்ய விரும்பாத சில விடயங்களை தற்போது செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களுக்கு வேறு வழியில்லை. அதற்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.