ரக்வானை பொசன் பெரஹரா யானை தாக்குதல் – பாகனும் உதவியாளரும் உயிரிழப்பு.

 


ரக்வானை ஸ்ரீ உபயதிலகாராம விகாரையில் நடைபெற்ற 78-வது பொசன் பெரஹர ஊர்வலத்திற்காக கொண்டு வரப்பட்ட யானை தாக்கியதில் பாகனும் அவரது உதவியாளரும் உயிரிழந்த துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்று (21) நடைபெற்ற பெரஹராவிற்காக இரண்டு யானைகள் விகாரைக்கு அருகில் கட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை அவற்றில் ஒன்றிற்கு தண்ணீர் கொடுக்க, பாகனின் உதவியாளர் அந்த யானையை ரக்வானை ஆற்றை நோக்கி அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் யானை திடீரென ஆவேசமடைந்து உதவியாளரை தாக்கி மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உதவியாளரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற யானைப் பாகனையும் அதே யானை தாக்கியதுடன், அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்திற்குப் பிறகு அந்த யானை விகாரைக்கு அருகிலுள்ள வயல்வெளி பகுதிக்குள் ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது.

வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, யானைக்கு மயக்க மருந்து செலுத்தி அதனை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.