பொசன் தினத்தில் பிரதமரின் வாழ்த்து: அனுபவத்தின் மூலம் உண்மையை உணர்வோம்.

 


புத்த பகவானின் போதனைகளுக்கு அமைவாக, வெளிப்புற தோற்றங்கள் அல்லது அனுமானங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எதையும் தீர்மானிக்காமல், அனுபவத்தின் மூலமும் நேரடியான உணர்வின் மூலமும் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்ற சிந்தனையுடன் இந்தப் பொசன் பௌர்ணமி தினத்தை பக்தியுடன் கொண்டாட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் ஸ்ரீ சம்புத்த சாசனத்தை நிலைநிறுத்திய மஹிந்த தேரரின் வரலாற்றுச் சிறப்புமிக்க தர்மதூதப் பணியை நினைவுகூரும் பொசன் பௌர்ணமி, ஆன்மீக விழிப்புணர்வு, ஞானம் மற்றும் சமூக சமத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் புனித நாளாகும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பொசன் பௌர்ணமி என்பது மத நிகழ்வாக மட்டுமல்லாமல், இலங்கையின் சிந்தனை, கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையில் ஆழமான மாற்றத்தை ஏற்படுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த தேரரின் வருகையுடன் இலங்கைக்கு கிடைத்த பௌத்த தத்துவம், பல நூற்றாண்டுகளாக நாட்டின் தேசிய அடையாளத்தை வடிவமைத்த விலைமதிப்பற்ற பாரம்பரியமாக விளங்கி வருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையான அபிவிருத்தி மனித மனதிலிருந்தே ஆரம்பமாகிறது என்பதை பொசன் தினம் நினைவூட்டுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கருணை, இரக்கம், சமத்துவம், ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வு போன்ற பௌத்த விழுமியங்கள் சமூகத்தின் அடித்தளமாக அமைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அத்தகைய விழுமியங்களை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே அமைதியான, நீதியான மற்றும் சுபீட்சமான இலங்கையை உருவாக்க முடியும் என்றும், பொருளாதார வளர்ச்சியுடன் ஒழுக்க விழுமியங்கள் நிறைந்த சமூகமும் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொசன் பௌர்ணமியின் உண்மையான சாரமாகிய ஒழுக்கம், அகிம்சை மற்றும் மனிதநேயம் ஆகியவை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நீதியான, வளமான நாட்டை உருவாக்க அரசாங்கத்திற்கு வழிகாட்டும் கொள்கைகளாக அமையும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக, இந்த புனிதமான பொசன் பௌர்ணமி தினம் அனைத்து பௌத்த மக்களுக்கும் அமைதி, நிம்மதி, ஞானம் மற்றும் சுபீட்சத்தை வழங்கும் புண்ணிய நாளாக அமைய வேண்டும் என அவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.