பிலிப்பைன்ஸை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு!



 தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ கடற்பகுதிக்கு அருகே இன்று (08) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கம் 7.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன், கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் நிலநடுக்கத்தின் வலிமை 8.2 ரிக்டர் அளவாக மதிப்பிடப்பட்டிருந்தாலும், பின்னர் அது திருத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையமும் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேவேளை, பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலஅதிர்வு ஆய்வு நிறுவனம் (PHIVOLCS), ஒரு மீற்றருக்கும் அதிக உயரமுள்ள சுனாமி அலைகள் உருவாகக்கூடும் என்றும், அவை பல மணி நேரங்கள் நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

இந்தோனேசிய புவியியல் ஆய்வு நிறுவனம் இந்த நிலநடுக்கத்தை 7.7 ரிக்டர் அளவாக பதிவு செய்துள்ளது.

இதுவரை பெரிய அளவிலான சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், கடுமையான அதிர்வால் சிலர் மயக்கமடைந்ததாகவும், அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவதானத்துடன் இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.