ஆர்டெமிஸ் III திட்டத்திற்கான விண்வெளி வீரர்கள் அறிவிப்பு: நாசா புதிய அணியை வெளியிட்டது.



 நாசா (NASA) நிறுவனம் தனது அடுத்த கட்ட ஆர்டெமிஸ் III (Artemis III) விண்வெளி ஆய்வுத் திட்டத்திற்காக மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களையும் ஒரு இத்தாலிய விண்வெளி வீரரையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இரண்டு வாரங்கள் நீடிக்கவுள்ள இந்த விண்வெளிப் பயணம் நேரடியாக சந்திரனில் தரையிறங்காது என்றாலும், எதிர்காலத்தில் மனிதர்களை சந்திரனின் மேற்பரப்பிற்கு கொண்டு செல்லவுள்ள புதிய தரையிறங்கும் விண்கலங்களின் முக்கிய பரிசோதனைப் பணியாக கருதப்படுகிறது.

அடுத்த ஆண்டு பூமியின் சுற்றுப்பாதையில் விண்கலங்களை ஒன்றிணைக்கும் (Docking) தொழில்நுட்ப சோதனையை இந்தத் திட்டம் உள்ளடக்கியுள்ளது. இதன் மூலம் சந்திரப் பயணத்திற்கான புதிய தொழில்நுட்பங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இந்த பரிசோதனையின் போது, ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் "Starship" மற்றும் புளூ ஒரிஜின் (Blue Origin) நிறுவனத்தின் "Blue Moon" சந்திர தரையிறக்க விண்கலங்கள் விண்வெளியில் முதன்முறையாக சோதனை செய்யப்பட உள்ளன.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற நிகழ்வில், நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் (Jared Isaacman) இந்த விண்வெளி வீரர்கள் குழுவை அறிவித்தார்.

அதன்படி, அமெரிக்க விண்வெளி வீரர்களான ஆண்ட்ரே டக்ளஸ் (Andre Douglas), பிராங்க் ரூபியோ (Frank Rubio), ரேண்டி ப்ரெஸ்னிக் (Randy Bresnik) ஆகியோருடன், ஐரோப்பிய விண்வெளி முகமையின் இத்தாலிய விண்வெளி வீரரான லூகா பார்மிட்டானோ (Luca Parmitano) ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், 58 வயதான ரேண்டி ப்ரெஸ்னிக் இந்த விண்வெளிப் பயணத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பரிசோதனை விமானியான அவர், ஏற்கனவே மூன்று விண்வெளிப் பயணங்களில் பங்கேற்ற அனுபவமிக்க விண்வெளி வீரராகக் கருதப்படுகிறார்.