முந்திரித் தோட்டத்தில் நபர் சுட்டுக் கொலை: 8 காவலாளிகள் கைது.



 புத்தளம் மாவட்டத்தின் வனாதவில்லுவ, கரதிவ் பகுதியில் அமைந்துள்ள முந்திரித் தோட்டம் ஒன்றில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், கல்லடி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, உயிரிழந்த நபர் கரதிவ் பகுதியில் உள்ள பெருந்தோட்ட நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான முந்திரித் தோட்டத்திற்குள் முந்திரி பறிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதன்போது அங்கு கடமையில் இருந்த காவலாளிகளால் அவர் பிடிக்கப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலின் போது, குறித்த நபர் தாக்கப்பட்டதுடன், ஏர் ரைபிள் என சந்தேகிக்கப்படும் துப்பாக்கியால் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த காயங்களால் அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் முந்திரித் தோட்டத்தில் பணியாற்றிய 8 காவலாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 4 ஏர் ரைபிள் துப்பாக்கிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 41 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுவதுடன், ஏத்தாலே, புத்தளம், கற்பிட்டி மற்றும் அனுராதபுரம் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வனாதவில்லுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.