கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில், இரண்டு வயதுடைய குழந்தை ஒன்று பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (22) மதியம் அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தகவலின்படி, தாயும் குழந்தையும் அயலவர் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், தனது கணவருக்கு உணவு வழங்குவதற்காக தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது குழந்தை அயலவர் வீட்டிலேயே விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிது நேரத்திற்குப் பின்னர் குழந்தையைக் காணாததால், அயலவர் குடும்பத்தினர் மற்றும் தாய் இணைந்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது அருகிலிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் குழந்தை விழுந்து கிடப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்த சம்பவத்தில் பிரமந்தனாறு ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தையே உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மேலதிக விசாரணைகள் மற்றும் பிரேதப் பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.jpeg)