களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு விசாரணையில் முக்கிய கைது.



 களுத்துறை வெட்டுமகடை பள்ளிவாசல் வீதி பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர் பயாகல, மெஹிமுல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சம்பத் குமாரதுங்க எனவும், அவர் ‘போஞ்சியா’ என்ற பெயராலும் அறியப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின்படி, மாளிகாவத்தை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கமராக்கள் ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் கிடைத்த தகவலின் பேரில், மாளிகாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இவர் ஹெரோயின் கடத்தல் மற்றும் போதைப்பொருள் வைத்திருத்தல் தொடர்பான பல குற்றச்சாட்டுகளுக்கு முன்பே தொடர்புடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (03) களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக்காவல் உத்தரவு பெற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கடந்த 28ஆம் திகதி காலை, களுத்துறை வெட்டுமகடை பகுதியில் கார் ஒன்றில் வந்த துப்பாக்கிதாரி ஒருவர், மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.