Iran, இஸ்ரேலின் வடக்கு பகுதிகளை இலக்கு வைத்து நேற்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த ஏப்ரல் மாதம் எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கைக்கு பின்னர், இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்ட முதல் தாக்குதல் இதுவாகும்.
இந்தத் தாக்குதல் தொடர்பில் Islamic Revolutionary Guard Corps வெளியிட்டுள்ள அறிக்கையில், இது ஒரு எச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய அந்த அமைப்பு, இத்தகைய நடவடிக்கைகள் தொடருமானால் அடுத்த கட்ட பதிலடிகள் இன்னும் பரந்தளவில் இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகளும் எதிர்கால தாக்குதல்களின் வரம்பிற்குள் வரக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் ஹைஃபா நகருக்கு தென்கிழக்கே அமைந்துள்ள ரமத் டேவிட் விமானப்படைத் தளத்தை குறிவைத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஏப்ரல் மாதத்தில் நடைமுறைக்கு வந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இதனிடையே, Donald Trump, தாக்குதல்களை நிறுத்திவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புமாறு ஈரானை வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அமெரிக்கா ஈரானுடன் எட்டும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் இஸ்ரேல் ஏற்க வேண்டிய சூழல் உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், Benjamin Netanyahu பதிலடி தாக்குதல்களைத் தவிர்த்து, மூன்று தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாம் கோரியுள்ளதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
