ஜி7 (G7) உச்சி மாநாட்டின் போது பிரான்ஸ் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், "இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டிருப்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் சிலரும் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடத் தொடங்கியுள்ளனர்.
அதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இந்த ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதே நாளில், உலக எரிசக்தி விநியோகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையும் மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காக திறக்கப்படும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான தொழில்நுட்ப மட்ட பேச்சுவார்த்தைகள் இந்த வாரத்திலேயே ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்குதல் அல்லது முடக்கப்பட்டுள்ள சொத்துக்களை விடுவித்தல் போன்ற நடவடிக்கைகள், ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் தனது உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துகிறதா என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் குறைவதோடு, உலகளாவிய எண்ணெய் சந்தைகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
