காலி நகர அபிவிருத்தித் திட்டத்தை விரைவுபடுத்த ஜனாதிபதி ஆலோசனை.

 


பிரதான நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் காலி நகர அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

உலக மரபுரிமை நகரமாகப் போற்றப்படும் காலியை கலாசார மற்றும் சுற்றுலா மையமாக மேம்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி இதன்போது ஆராய்ந்ததுடன், திட்ட அமலாக்கத்தில் ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்தும் அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடினார்.

காலி நகர மத்திய பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையம், தபாலகம், சிறைச்சாலை மற்றும் தாதியர் பயிற்சிப் பாடசாலை ஆகியவற்றை மாற்று இடங்களுக்கு மாற்றுவதற்குத் தேவையான காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

முறையான நகர திட்டமிடலின் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, காலி நகரின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளில் அனைத்து அரச நிறுவனங்களும் ஒருங்கிணைந்த முறையில் செயற்பட வேண்டுமென தெரிவித்தார். நகரத் திட்டமிடல், அரச நிறுவனங்களை கோட்டைக்கு வெளியே அமைத்தல், புதிய கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களில் ஒருமித்த அணுகுமுறை தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், நகர அபிவிருத்தி அதிகார சபை இந்தத் திட்டத்தின் வெற்றிகரமான முன்னேற்றத்தில் முக்கிய பொறுப்பை வகிக்க வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கூட்டத்தில் முதலீடுகளை ஈர்ப்பது, புதிய நிர்மாணப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு, காலி கோட்டை மற்றும் அதனைச் சூழவுள்ள கடற்கரைப் பகுதிகளை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மேம்படுத்துவது போன்ற விடயங்களும் ஆராயப்பட்டன.

அத்துடன், பொதுமக்களுக்கு அரச சேவைகளை எளிதாக வழங்கும் நோக்கில் காலி நகரிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களையும் ஒரே நிர்வாகக் கட்டிடத்தின் கீழ் கொண்டு வருவது மற்றும் தற்போதுள்ள நுண்கலைப் பாடசாலையை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.