ஈரான் மீது அமெரிக்காவின் புதிய வான்வழித் தாக்குதல்.

 


ஈரானுக்கு எதிராக "மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும்" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களிலேயே, அமெரிக்க இராணுவம் ஈரானின் பல பகுதிகளை இலக்கு வைத்து புதிய வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் அறிவிப்பின்படி, ஈரானின் தெற்குப் பகுதிகளில் உள்ள பல முக்கிய இலக்குகள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில், உலகின் முக்கிய கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையை அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் மூடுவதாக ஈரான் இராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆயுதமேந்திய கப்பல்கள் மட்டுமன்றி எண்ணெய் விநியோகக் கப்பல்கள் உள்ளிட்ட அனைத்து கப்பல்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் இந்த முடிவு உலக எரிசக்தி சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாக உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியின் குறிப்பிடத்தக்க பகுதி இடம்பெறுவதால், கச்சா எண்ணெய் விலைகள் வேகமாக உயரத் தொடங்கியுள்ளதாக சர்வதேச பொருளாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் எந்தவொரு கப்பலும் தங்களது இலக்காக மாறக்கூடும் என ஈரான் இராணுவ தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் புதிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த நிலைமை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பரவலான மோதலுக்கான அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.