எல் நினோ (El Niño) மற்றும் லா நினா (La Niña) காலநிலை மாற்றங்களின் காரணமாக கடுமையான வறட்சி மற்றும் அதன்பின் தீவிர மழைவீழ்ச்சி ஏற்பட்டு பாரிய அனர்த்தங்கள் உருவாகக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.
இந்த அபாயங்களை முன்னெச்சரிக்கையாக எதிர்கொள்ள அரசாங்கம் ஏற்கனவே குழுவொன்றை நியமித்திருந்தாலும், அது போதுமானதல்ல என்பதால், அவசரமாக ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இன்று (24) பாராளுமன்றத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
அனர்த்த முகாமை அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், கட்சி, இனம், மதம் உள்ளிட்ட வேறுபாடுகளைத் தாண்டிய தேசிய செயல் திட்டம் அவசியம் என்றும் அவர் கூறினார். எதிர்க்கட்சியும் இதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கு பங்களிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, தற்போதைய அரசாங்கம் விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளதாகவும், தரமற்ற விதைகள், உரப் பிரச்சினை, உபகரண விலை உயர்வு மற்றும் யானை–மனித மோதல் போன்ற காரணங்களால் விவசாயிகள் கடும் சிரமத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், விவசாயிகள் இன்று புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
சுற்றுச்சூழல் சட்டம் தொடர்பாக பேசுகையில், உற்பத்தியாளர் விரிவான பொறுப்புக்குள் (Extended Producer Responsibility) நுகர்வோரை சேர்ப்பது தவறான நடைமுறை எனவும், அது மறைமுக வரிச்சுமையை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்தார்.
மேலும், சூப்பர் மார்க்கெட்டுகள் பிளாஸ்டிக் பைகள் மூலம் பெரும் இலாபம் ஈட்டுவதாக நீதிமன்ற மனுவொன்றில் வெளிப்பட்டுள்ளதாகவும், இதைத் தடுக்கும் வகையில் சட்ட திருத்தம் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.
13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக, அது தற்போதுள்ள வடிவில் பாதுகாக்கப்பட்டு மாகாண சபை அதிகாரங்கள் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) செயல்முறையில் உள்ள சட்ட ஓட்டைகளை பயன்படுத்தி பெரிய முதலீட்டாளர்கள் தப்பிச் செல்லும் நிலை இருப்பதால் அவை திருத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வனவிலங்கு துறையில் பதவி உயர்வுகள் 30 ஆண்டுகளாக வழங்கப்படாத நிலை, பணியாளர் பற்றாக்குறை, சம்பள தர மாற்றம் மற்றும் தன்னார்வ வழிகாட்டிகளை நிரந்தரமாக்குதல் போன்ற பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
இறுதியாக, உயர்தர மாணவர்களுக்கு தேர்வு தயாரிப்பு காலம் குறைக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு நியாயமான கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.
.jpeg)