வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே அஸ்வெசும உதவி தொடரும்.

 


அஸ்வெசும நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை இனிமேல் ஏழை மற்றும் மிகுந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அஸ்வெசும நலத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் இவ்வாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக பயனாளர்களின் தரவுகளை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

2023 ஆம் ஆண்டில் நான்கு பிரிவுகளின் கீழ் சுமார் 16 இலட்சம் பேர் இந்த உதவித்தொகையை பெற்றிருந்தனர். எனினும், 2025 ஏப்ரல் மாதத்தில் நான்காவது பிரிவான இடைக்காலப் பிரிவில் இருந்த சுமார் 3,15,000 பயனாளர்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டன.

மேலும், இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் மூன்றாவது பிரிவில் இருந்த சுமார் 4,25,000 பயனாளிகளுக்கான நிவாரண உதவித்தொகையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்விரு பிரிவுகளிலும் உள்ள ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே மீண்டும் அஸ்வெசும நலத்திட்டத்தின் உதவித்தொகை வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபையின் உதவி ஆணையாளர் அஷான் தர்ஷக தெரிவித்துள்ளார்.