கனடா பாராளுமன்றத்தின் கலாச்சார அமைச்சர் மார்க் மில்லர், நேற்று (10) “பாதுகாப்பான சமூக ஊடகச் சட்டம்” (Safe Social Media Act) என்ற பெயரில் இந்த வரைவுச் சட்டமூலத்தை சமர்ப்பித்துள்ளார்.
கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக ஊடகக் கட்டுப்பாட்டு சட்டத்தை ஒத்ததாக இந்த முயற்சி காணப்பட்டாலும், கனடாவின் சட்டமூலம் சில முக்கிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக, சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சில விலக்குகள் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்தின் மூலம் சமூக ஊடக தளங்களுடன் சேர்த்து ‘ChatGPT’ போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான செட்போட்களையும் ஒழுங்குபடுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இணையத்தில் பரவும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்தும் நோக்கிலும் பல்வேறு விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சிறுவர்களை அவதூறு செய்தல், வெறுப்பை பரப்புதல், வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட ஏழு வகை உள்ளடக்கங்கள் “தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள்” என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு 10 மில்லியன் கனேடிய டொலர்கள் அல்லது நிறுவனத்தின் உலகளாவிய மொத்த வருவாயின் 3 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சட்ட அமலாக்கம் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக “கனடா டிஜிட்டல் பாதுகாப்பு ஆணைக்குழு” என்ற சுயாதீன அமைப்பையும் உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்ற பாடசாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான சர்ச்சைகள், இந்த சட்டமூலத்தை கொண்டுவருவதற்கான அழுத்தத்தை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.
அடுத்த வாரம் பிரான்சில் நடைபெறவுள்ள G7 உச்சிமாநாட்டில் சிறுவர்களின் இணையப் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் அபாயங்கள் தொடர்பாக உலகத் தலைவர்கள் விரிவாக கலந்துரையாடவுள்ளனர்.
ஏற்கனவே பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் இதுபோன்ற சட்டங்களை அமல்படுத்தியுள்ள நிலையில், கிரீஸும் 2027 ஜனவரி முதல் 15 வயதிற்குட்பட்டோருக்கான சமூக ஊடகக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
எனினும், இந்தச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை பாதிக்கக்கூடும் என சில மனித உரிமை மற்றும் தாராளவாத அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
.jpeg)