வேரஹெரவில் பெருமளவு ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது.




 ஹெரோயின் மற்றும் ஐஸ் (Ice) போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவரை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று (10) இரவு பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேரஹெர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 1 கிலோகிராம் 80 கிராம் ஹெரோயின் மற்றும் 5 கிலோகிராம் 24 கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக வேரஹெர பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் வெளிநாடுகளில் இயங்கும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுடன் தொடர்புகளை பேணி, உள்நாட்டில் போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இந்த கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய ஏனைய நபர்கள் குறித்து தகவல்களைத் திரட்டும் பணிகளும் தொடர்கின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.