தப்பிச் செல்ல முயன்ற தம்பதி யாழ்ப்பாணத்தில் கைது


 தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றினுள் இருந்து பெண் மருத்துவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்ட அவரது காதலனும், அவரது மனைவியும் குழந்தையுடன் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 23ஆம் திகதி வெள்ளவத்தையிலிருந்து சாவகச்சேரி நோக்கிப் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த தம்பதியினர் தொடர்பான தகவலைத் தொடர்ந்து, யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் வலான ஊழல் தடுப்புப் பிரிவினரும் இணைந்து இன்று (24) அதிகாலை மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட வேளையில் பிரதான சந்தேகநபர் முகக்கவசம் அணிந்திருந்ததுடன், அவரது மனைவி அடையாளம் மறைக்கும் வகையில் வேடமணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளின் போது, வவுனியாவிலிருந்து குருநாகல் சென்று தனது மற்ற இரு பிள்ளைகளையும் சந்தித்த பின்னர் பொலிஸில் சரணடைய திட்டமிட்டிருந்ததாக சந்தேகநபர் கூறியுள்ளார்.

சந்தேகநபர்கள் கடந்த சில நாட்களாக நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பகுதிகளில் தங்கியிருந்ததுடன், கடல் மார்க்கமாக வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயற்சித்திருக்கலாம் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 17ஆம் திகதி தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து 34 வயதுடைய ஷம்யா தர்ஷனி என்ற மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவர் அம்பாறை பொது வைத்தியசாலையில் பணியாற்றி வந்த இயல் வைத்தியர் ஆவார்.

சம்பவத்துடன் தொடர்புடைய காதலன் கன்னோருவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியியலாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி காட்சிகளில், சம்பவத்திற்கு முந்தைய இரவு அவர் மருத்துவருடன் இருந்ததும், பின்னர் மயக்கநிலையில் இருந்த அவரை வெளியே கொண்டு சென்றதும் பதிவாகியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.