பல பகுதிகளில் மழை தொடரும் – 40 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.




 நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

 அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும், ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்கள், அதேபோல் திருகோணமலை மாவட்டம் ஆகிய பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.