நாட்டை சூழும் கடும் மழை அபாயம்! பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை – கடல் கொந்தளிப்பு அதிகரிப்பு

 இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசத்தின் தாக்கம் காரணமாக, நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற வானிலை மேலும் சில நாட்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

வெளியிடப்பட்டுள்ள புதிய வானிலை முன்னறிவிப்பின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வட மாகாணங்கள் உள்ளிட்ட திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை நேரங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இந்த வானிலை அமைப்பின் தாக்கம் காரணமாக நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காலி முதல் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

அத்துடன், குறித்த கடற்பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் எனவும், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளும் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் எதிர்வரும் வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து அவதானிக்குமாறும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.